உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; நம்மால் பார்க்க முடியாது

இன்று ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்; நம்மால் பார்க்க முடியாது

கோவை : இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று(டிச.,14) நிகழ உள்ளது; இந்த கிரகணம் நம் நாட்டில் தெரியாது.

நடப்பாண்டின் முந்தைய சூரிய கிரகணம் ஜூன், 21ம் தேதி நிகழ்ந்தது. மேலும், நான்கு சந்திர கிரகணங்களும் நிகழ்ந்துள்ளன. இதன்தொடர்ச்சியாக இன்று இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. முந்தைய சூரிய கிரகணத்தை போன்று இது நம் நாட்டில் தெரியாது. சிலி, அர்ஜென்டினா, பசிபிக் பெருங்கடல், அன்டார்ட்டிகா மற்றும் தென் அமெரிக்காவின் சில நகரங்களில் இந்த வான நிகழ்வு தெரியும். கோவை அறிவியல் மண்டல மாவட்ட அறிவியல் அலுவலர் பழனிசாமி கூறியதாவது:சூரிய கிரகணம் இரவு, 7.04 மணிக்கு துவங்கும். முழு கிரகணம், 08.02 மணிக்கு துவங்கும். 9.43 மணியளவில் உச்சம் அடைந்து, மறுநாள் காலை, 12.23 மணிக்கு முடிவடையும். சூரிய கிரகணம் தெரியும் இடங்களில் பகல் நேரமாக இருக்கும். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக சந்திரன், சூரியனுக்கு, ஐந்து கிரகணங்கள் நிகழலாம். இருந்தாலும் பெரும்பாலான ஆண்டுகளில் இரண்டு கிரகணங்களை மட்டும் நாம் காண்கிறோம். ஐந்து கிரகணங்கள் ஒரு ஆண்டில் ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று. இதுபோன்று கடைசியாக, 1935ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அடுத்தது, 2,206 ஆண்டில் இதுபோன்று நிகழலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !