ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பச்சை பரத்தல்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வேதபிரான் பெரியாழ்வார் திருமாளிகையில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பச்சைபரத்தலை பார்வையிடும் நிகழ்ச்சியுடன் மார்கழி உற்சவம் துவங்கியது. டிச.25 அதிகாலை 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.
ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளினர்.அங்கு வேதபிரான் சுதர்சனன் எதிர்கொண்டு மரியாதை செய்ய திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்கமன்னாரை பெரியாழ்வார் அழைத்து வந்தார். அங்கு அனைத்துவகை காய்கறிகள் பரப்பப்பட்ட பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் பின் ராஜகோபுரம் வழியாக வடபத்ரசயனர் சன்னதி கோபாலவிலாச பகல்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.அங்கு சிறப்பு வழிபாடுகளுடன் பகல்பத்து உற்ஸவம் துவங்கியது. இதை தொடர்ந்து அரையர்சேவை, பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. சடகோபராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.
டிச. 24 வரை நடக்கும் விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடு, கோபால விலாசத்தில் அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரியபெருமாள் பத்தி உலாவுதல், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தடைதலும் நடக்கிறது.டிச.25 காலை 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு, டிச.26 முதல் 2021 ஜனவரி 4 வரை மார்கழி எண்ணெய்காப்பு உற்ஸவமும் நடக்கிறது.