உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்

மணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்

 புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும் என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலர் தட்சிணாமூர்த்தி, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள புகார்:புதுச்சேரி, வெள்ளாள வீதியில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க தேர், 1989ம் ஆண்டு நன்கொடை ஒப்பந்த அடிப்படையில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு கையொப்பமிட்டு தரப்பட்டது. இரண்டு கோவில்களும், தங்கத்தேரை பூஜைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, நந்திகேஸ்வரர் கோவில் நிர்வாகம், மணக்குள விநாயகர் கோவிலுக்கு, தங்க தேரை நன்கொடையாக வழங்கியது.தற்போது மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த தங்கத்தேரில் பல்வேறு பகுதிகளை காணவில்லை.குறிப்பாக, அதன் அடிப்பகுதியை காணவில்லை. அதனோடு இருந்த சிற்பங்களும் மாயமாகியுள்ளன. இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோதும் பதில் இல்லை. இந்த கோவில் தேரின் அடிப்பாகங்கள், வேறு கோவிலுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். வரலாற்று பின்னணி கொண்ட தங்கத்தேரின் பாகங்களை மீட்டு, மீண்டும் கோவிலுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

பத்திரமாக உள்ளது: மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர் பரசுராமன் நேற்று கூறியதாவது:தங்க தேரின் அடி பாகம் மாயமானதாக, கவர்னரிடம், திருக்கோவில் கமிட்டி புகார் அளித்துள்ளது. தங்க தேரை, மர சகடையில் வீதியுலா கொண்டு செல்வதில் சிரமமாக இருந்தது. அதனால், மரத்தால் ஆன சகடைக்கு பதிலாக, ரப்பர் சக்கரம் பொருத்திய சகடை, பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2012ம் ஆண்டு, சுப்பையா சாலையில் உள்ள தனியார் கோவில் நிர்வாகம், சகடை தேவைப்படுவதாக அணுகியது. அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, அறநிலைய துறை வாயிலாக, மர சகடை அக்கோவிலுக்கு விற்பனை செய்யப்பட்டது.தங்க முலாம் பூசப்பட்ட தேர், மணக்குள விநாயகர் கோவிலில், தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. தங்க தேரின் பாகங்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !