உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு; ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியான நேற்று, நாமக்கல், அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு, கோவிலில் சொர்க்க வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் சொர்க்கவாசல் கதவுகளை திறந்து வைத்தனர். முதலில் சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டது. இணையவழியாக பதிவு செய்த, 750 பேர், நேரில் பதிவு செய்த, 750 பேர் என, தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு, 1,500 பேர் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

* ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை, 5:00 மணிக்கு நடந்தது. பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசித்து சென்றனர். தொடர்ந்து, ஜனகல்யாண் இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு, 50 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆர். புதுப்பாளையம், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், நாமகிரிப்பேட்டை வேணுகோபால் சுவாமி, கடந்தப்பட்டியில் குன்றில் உள்ள பொன்வரதராஜ பெருமாள் கோவில்; பள்ளிபாளையம், ப.வேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட, மாவட்டத்தின் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !