நவரத்தின அங்கியில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் அருள்பாலிப்பு
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை நடந்த சனிப் பெயர்ச்சி விழாவை, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில், உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 27 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அதிகாலை, 5:22 மணிக்கு சனீஸ்வரர், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தபோது, சனி பகவானுக்கு, நவரத்தின அங்கி அலங்காரத்தில், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்க காகம் வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் சனீஸ்வரருக்கும், மகா தீபாராதனை நடந்தது.
கட்டுப்பாடு: சனிப் பெயர்ச்சி விழாவிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.ஆன்லைன் பதிவு வைத்திருந்தவர்களை மட்டும் அனுமதித்தனர்; மற்றவர்களை திருப்பி அனுப்பினர். கோவில் வளாகத்தில், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தரிசனம் செய்தனர்.