உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகதளாவில் எளிமையாக நடந்த பூகுண்டம் திருவிழா

ஜெகதளாவில் எளிமையாக நடந்த பூகுண்டம் திருவிழா

குன்னூர்: குன்னூரில் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவில், பக்தி பரவசத்துடன் பூகுண்டம் திருவிழா எளிமையாக நடந்தது.

நீலகிரியில், படுகரின மக்கள், டிச., ஜன., மாதங்களில் ஹெத்தை பண்டிகை கொண்டாடுகின்றனர். பேரகனி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, எப்பநாடு, கேத்தி பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. கன்னி ஹெத்தையம்மன் கோவில் உள்ள ஜெகதளாவில் கடந்த மாதம் துவங்கிய திருவிழாவில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டவர்கள் கொதுமுடி கிராமம் வரை நடை பயணம் சென்று அருள்வாக்கு கூறினர். காரக்கொரை மடிமனையில், இன்று கத்திகை நிகழ்ச்சியை தொடர்ந்து காலை பூகுண்டம் திருவிழா நடந்தது.

கொரோனா பாதிப்பால் எளிமையாக கொண்டாடிய இந்த விழாவில், கோவில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்கினார். ஹெத்தைக்காரர்கள் மற்றும் பெரியவர்கள் காலில் மக்கள் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தன. வரும் 4ம் தேதி ஜெகதளா பாறை அருகே உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து சுத்தக்கல் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆறூர் கிராம மக்கள் செய்துள்ளனர். குன்னூர் ஜெகதளா கிராமத்தில் மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக கன்னி ஹெத்தையம்மனை வழிபடும் வகையில், விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !