உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் அருகே 2500 புரவிகளுடன் 13 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா!

மேலூர் அருகே 2500 புரவிகளுடன் 13 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா!

மேலூர்: மேலூர் அருகே அ.வல்லாளபட்டியில் சின்ன புலி அய்யனார், பெரிய புலி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா 13 ஆண்டுகளுக்கு பின் மே 23ல் துவங்கி நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஜூன் 1, 2ல் புரவி எடுப்பு நடக்கிறது. அ.வல்லாளபட்டியில் சின்னபுலி அய்யனார் மற்றும் பெரிய புலி அய்யனார் கோயிலில் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும், பின் ஆறு ஆண்டுகள், 10 ஆண்டுக்கு ஒரு முறை என இவ்விழா நடந்தது. தற்போது 13 ஆண்டுக்கு பின் மே 23ல் விழா துவங்கியது. பக்தர்கள் 1200 குதிரைகள் பொம்மை, நாகம், நாய் போன்ற 1300 சிலைகள் செய்து கோயில் முன் நேர்த்திக்கடனாக வைத்தனர். ஜூன் 1 மற்றும் 2ல் புரவி எடுப்பு நடக்கிறது. கோயில் வரலாறு : பாண்டிய மன்னனிடம் தளபதியாக இருந்த வல்லாள தேவன் பெயரில் ஊர் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பெண் ஒருவரை பக்கத்து நாட்டு மன்னன் கடத்தி சென்றார். அதனால் தற்போது திருவிழா நடக்கும் பொட்டல் பகுதியில் போர் மூண்டது. சின்ன புலி அய்யனார் இறுதி வரை நின்று போராடினார். பெரிய புலி அய்யனார் பாதியில் அருகிலுள்ள மலையில் சென்று தங்கினார் என தகவல்கள் உள்ளன. இருவருக்கும் தனித் தனியாக கோயில்கள் இருந்தாலும், போர் நடந்த இடத்தில் திருவிழா இன்றளவும் நடக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த ரவிந்திரகுமார் கூறியதாவது: பக்தர்கள் நேர்த்திக்கடனாக புரவிகள், பொம்மைகளை செய்து செலுத்துவர். அவை ஸ்தபதிகளை கொண்டு இதே இடத்தில் செய்யப்படும். இந்தாண்டு குதிரைகள் மட்டும் 1200 செலுத்தப்பட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெரிய புலி அய்யனார் கோயிலுக்கும், இரண்டு பங்கு சின்னபுலி அய்யனார் கோயிலுக்கும் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !