கங்கை நதி பூமிக்கு வந்த கங்கா துஷிகரா விழா கோலாகலம்!
புண்ணியம் தழைக்கச் செய்வது கங்கை நதி. தேவலோகத்தில் மந்தாகினியாகவும் பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள். மகிமை வாய்ந்த கங்கை நல்லாளைக் கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பர். கங்கை பூமிக்கு வரக் காரணம் பகீரதன். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான். அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து, முடிவில் பகீரதன் அதை முடித்தான். தேவலோகத்தில் இருக்கும் கங்கையை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான். அவன் தவம் கண்டு மகிழ்ந்த கங்கை, ""நான் பூமிக்கு வரும் அளப்பரிய வேகத்தை சிவனால் மட்டுமே தணிக்க முடியும். எனவே சிவனை வேண்டித் தவமிருந்து, என்னைத் தாங்கி பூமியில் விழச் செய்ய அவர் சம்மதம் பெற்று வா என உபாயம் கூறினாள். மீண்டும் சிவனை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்தான். சிவன் காட்சி கொடுத்து, ""என்ன வரம் வேண்டும்? எனக் கேட்க, ""கங்கையிடம் பூமிக்கு வர சம்மதம் வாங்கிவிட்டேன். அவள் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்தி பூமியில் பாயவிட வேண்டும் என்று கேட்டான். சிவனும் சம்மதித்தார். கங்கை வெகு வேகமாக பூமிக்கு வந்தாள். சிவன் தன் தலைமுடியால் தடுத்து அமைதியாகப் பாயச் செய்தார். கங்கையை பகீரதன் பாதாளத்திற்கு அழைத்துச் சென்று தன் முன்னோர் அஸ்தியைக் கரையைச் செய்து, அவர்களைப் புனிதப்படுத்திய பின் கங்கையை பூமியில் பாயும்படி கேட்டுக் கொண்டான். இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள்- வைகாசி மாத வளர்பிறை 10-ஆம் நாளில்தான். இதையொட்டி கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த நாள் கங்கா துஷிகரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாரணாசியில் நடைபெற்ற துஷிகரா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.