உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் சுப்பிரமணியர் கோயில்

கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் சுப்பிரமணியர் கோயில்

மேட்டுப்பாளையம்: சுப்பிரமணியர் கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையில், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாகும். இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அனைத்து திருவிழாக்களும் நடைபெற்று வந்தன. காலப்போக்கில் கோவில் சிதிலமடைந்ததால், அவற்றை இடித்து விட்டு புதிதாக திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டன.

இதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுப்ரமணியர் கோயிலை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கோவில் கட்டும் பணிகள் துவங்கின. கோவில், கோபுரம், சிவன், பார்வதி, விநாயகர், நவகிரக ஆகிய சன்னதிகள், முன் மண்டபம், தியான மண்டபம், கோவிலின் அலங்கார நுழைவாயில் ஆகிய திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கோவிலில், திருப்பணிகள் நடைபெற்று வந்ததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, எவ்வித விழாக்களும் நடைபெறவில்லை. இதனால் மேட்டுப்பாளையம் நகர முருக பக்தர்கள், முக்கிய விழா நாட்களில், இக்கோயிலுக்கு வராமல், வெளியூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் சுப்பிரமணியர் கோவிலில், திருப்பணிகள் முடிந்த நிலையிலும், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளதால், மேட்டுப்பாளையம் நகர முருக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், புதிதாக அமைத்த சிவன் மற்றும் பார்வதி சன்னதியில், சுவாமி சிலைகள் வைக்க, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சிலைகள் அமைத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !