உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

திசையன்விளை : உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு, ஆடி அமாவாசை, நவராத்திரி, திருக்கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், பிரதோஷம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடக்கிறது. அதில் மிக முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழாவாகும். இவ்வாண்டு வைகாசி விசாக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவில் முதல் நாளில் பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள், சிவசக்தி மகளிர் மன்றம் சார்பில் பரதநாட்டியம், குழு நடனம், பரிசு வழங்கல், சதாசிவம் தலைமையில் பஜனை, பக்தி இசைப்பாடல்கள், திருஞானசம்பந்தர் நிகழ்த்திய சிவ அருள்நெறி திருக்கூட்டத்தாரின் தேவார இன்னிசை மற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று விசாக திருநாளில் காலையில் 4 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8.30 மணிக்கு சிறப்பு பூஜை, 1 மணிக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்டு பித்தளை விமான வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல், சுவாமி நான்கு வீதிகளிலும் வீதிஉலா வருதல், வாணவேடிக்கை, சிவபுராணம் ஒப்புவித்தல், பாட்டு, பேச்சு போட்டிகள், மங்கள இசை, பக்தி சொற்பொழிவுகள், திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன்தினம் முதலே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் உவரியில் குவியத் துவங்கினர். நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் உவரி கடலில் புனித நீராடி, தெப்ப குளத்திலும், கிணற்றிலும் குளித்து ஈரத்துணிகளுடன் கோயிலை வலம் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து திருக்கனம் சாற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் வழங்கப்படும் மிக முக்கிய பிரசாதமாகிய நோய் தீர்க்கும் அருமருந்தாக பயன்படும் மனம் மிக்க சந்தனத்தை வாங்கி உடல் எங்கும் பூசி பக்தி பரவசம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும், முடி காணிக்கை செலுத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பல்வேறு பக்தர்கள் இக்கோயிலில் மட்டுமே நடைபெறும் கடலில் இருந்து பிளாப்பெட்டிகளில் மணல் எடுத்து தலையில் சுமந்து கடற்கரையில் குவிக்கும் வித்தியாசமான நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டேன்லி ஜோன்ஸ் மேற்பார்வையில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராதாபுரம் ஸ்ரீதர், பணகுடி விஜயகுமார், வள்ளியூர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் செய்திருந்தனர். தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை திசையன்விளை நிலைய தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் உவரியில் முகாமிட்டு செய்திருந்தனர். விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து உவரிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !