உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்கர் பிரம்மா கோயில்

புஷ்கர் பிரம்மா கோயில்

படைப்புக் கடவுளான பிரம்மாவின் கோயில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் உள்து. இங்கு சாவித்திரி, காயத்ரியுடன் பிரம்மா அருள்புரிகிறார்.   

ஒருமுறை பிரம்மா உலக நலன் கருதி யாகம் ஒன்றை நடத்த விரும்பினார். அதற்காகத் தன் வாகனமான அன்னப் பறவையிடம் தாமரை மலரைக் கொடுத்து வழியில் அதை எங்கு கீழே விடுகிறதோ அங்கு நடத்த முடிவு செய்தார். அந்த இடமே புஷ்கர் எனப் பெயர் பெற்றது. இதற்கு ‘நீலத்தாமரை’ என்பது பொருள்.
 யாகத்தை தொடங்குவதற்காக பிரம்மா மனைவி சாவித்திரிக்காக காத்திருந்தார். அவள் வர தாமதமானதால் யாகத்தை தொடங்க முடியாமல் போகவே இந்திரனிடம் ஆலோசனையின்படி காயத்ரி என்னும் பெண்ணை திருமணம் செய்து யாகத்தில் அமர்ந்தார். தாமதமாக வந்த சாவித்திரி யாகத்தில் வேறொரு பெண் இருப்பது கண்டு, ‘இனி உமக்கு கோயில் இல்லாமல் போகட்டும்’  என சபித்தாள். அருகிலுள்ள அருணகிரி என்னும் குன்றில் ஏறி அமர்ந்தாள்.
கோயிலின் நுழைவு வாயில் கோட்டையின் முகப்பு போல இருக்கிறது. ‘ஸ்ரீஜகத்பிதா பிரம்மா மந்திர்’ என வாசலில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ‘உலகத்தின் தந்தை பிரம்மாவின் கோயில்’ என பொருள். கருவறையின் மீது 70 அடி உயர விமானத்தில் வாகனமான அன்னம் பளிச்சென காட்சியளிக்கிறது. பிரகாரத்தின் ஒரு பகுதியில் காணிக்கையாக வழங்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் குவிக்கப்பட்டுள்ளன. கருவறையை நோக்கி வெள்ளி ஆமை உள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் புஷ்கர்.   
நான்கு முகங்களைக் கொண்ட  பிரம்மாவின் சலவைக்கல்லால் ஆன சிலையை ஆதிசங்கரர் நிறுவினார். அவரது கைகளில் புத்தகம், அருகம்புல், கமண்டலம், ஜெபமாலை உள்ளன. இதை ‘விஸ்வகர்மா கோலம்’ என்கின்றனர். பிரம்மாவின் இடப்புறம் காயத்ரி, வலப்புறம் சாவித்திரி உள்ளனர்.  
 பராசர கோத்திரத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரிகள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். சந்நியாசி, பிரம்மச்சாரி மட்டுமே கருவறைக்குள் நுழைய முடியும். அருகிலுள்ள ஆரவல்லி குன்றி்ல் ஏறி இயற்கையை ரசிக்கலாம்.  
எதிரெதிர் திசைகளில் உள்ள குன்றுகளில் கோயில்கள் உள்ளன. உயரமான குன்றின் மீது சாவித்திரி கோயிலும், மற்றொரு சிறு குன்றின் மீது காயத்ரி கோயிலும் உள்ளது. கார்த்திகை பவுர்ணமியின் போது ஒட்டகத் திருவிழா நடக்கிறது.  
எப்படி செல்வது
* ராஜஸ்தான் உதய்ப்பூரில் இருந்து 279 கி.மீ.,
* ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து 185 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !