உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சலான்குட்டை முனியப்பன் ஸ்வாமிக்கு நடந்த கண் திறப்பு!

அஞ்சலான்குட்டை முனியப்பன் ஸ்வாமிக்கு நடந்த கண் திறப்பு!

வாழப்பாடி: வாழப்பாடி அருகே ஆண்களே, ஸ்வாமிக்கு படையல் வைத்து வழிபடும், அஞ்சலான்குட்டை முனியப்பன் ஸ்வாமிக்கு, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வாழப்பாடியில் இருந்து மூன்றாவது கி.மீ., தூரத்தில், கொட்டிப்பள்ளம் ஓடை அருகே சிங்கிபுரம் காலனி எல்லையில், மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும், பழமையான முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் அஞ்சலான் குட்டை அருகே அமைந்துள்ளதால், அக்கோவில், அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் என விளங்கி வருகிறது. அக்கோவிலுக்கு பெண்கள் சென்றால், முனி தாக்குவதாக கூறப்படுகிறது. அதனால், அக்கோவிலுக்கு பெண்கள் செல்ல, முன்னோர்கள் தடை விதித்துள்ளனர். ஆண்கள் மட்டுமே சென்று பொங்கல் வைக்கின்றனர். அதுமட்டுமின்றி, நேர்த்திக்கடன் தீர்க்க கிடா, கோழி பலியிட்டு, அந்த கறியை அக்கோவில் வளாகத்திலேயே ஆண்களே சமைத்து, ஸ்வாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர். கோவிலுக்கு வரும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், ஆண்களே பந்தி வைத்து விருந்து பரிமாறுகின்றனர். ஸ்வாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, சமைத்த கறியையும், பெண்கள் சாப்பிடுவதில்லை. மிச்சம் மீதியை கூட, வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. அக்கோவில் விபூதியைகூட, பெண்கள் வைத்துக் கொள்வது கிடையாது. கடந்தாண்டு அக்கோவில் மூலவர் சிலை சேதமடைந்ததால், புதிய கற்சிலையை ஐதீக முறைப்படி வடித்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்திலுள்ள பழமையான சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய மூன்று ராட்சத ஸ்வாமி சிலைகள் மற்றும் குதிரை வாகனம் ஆகியவற்றை வர்ணம் தீட்டியும் புதுப்பித்தனர். பணிகள் அனைத்தும் முடிந்ததால், முனியப்பன் ஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி, நடந்தது. விழாவையொட்டி, மூலவரான முனியப்பன் ஸ்வாமிக்கு பொங்கல் வைத்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடா வெட்டி கறி சமைத்ததோடு, உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து பரிமாறினர். வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !