பாதயாத்திரை பக்தர்களுக்கு முதலுதவி மருத்துவ முகாம்!
ஆறுமுகநேரி : வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த பக்தர்களுக்கு சாகுபுரத்தில் முதலுதவி மருந்துவ மையம் மூலம் மருத்துவ உதவி அளித்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். நேற்று முன்தினம் நடந்த விசாக திருவிழாவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்தனர். இவ்வாறு வெகு தூரங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தசை வலி உட்பட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக ஆண்டு தோறும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் முதலுதவி மருத்துவ மையம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த முதலுதவி மருத்துவ மையத்தினை டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிறுவன உதவித் தலைவர்கள் சுபாஷ்டாண்டன், ஜெயக்குமார், பொது மேலாளர்கள் பசுபதி, சந்திரசேகர், சுந்தர், முரளி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு டிசிடபிள்யூ நிறுவன மருத்துவ அதிகாரி மால்ஸ்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்புத்துறை, மருத்துவ பிரிவு மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் செய்திருந்தனர். மேலும் சாகுபுரத்தில் பக்தர்கள் வசதிக்காக நீர் மோர் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.