கொரவனஹள்ளி மஹாலட்சுமி கோவில் மீண்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு
துமகூரு சர்ச்சையை ஏற்படுத்திய, கொரவனஹள்ளி மஹாலட்சுமி கோவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஹிந்து அறநிலைய துறையிடமிருந்து, மீண்டும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.துமகூரு மாவட்டம், கொரட்டகரேவில், கொரவனஹள்ளி மஹாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், 2015, மார்ச்சில், கோவில் அறக்கட்டளை தர்மகர்த்தாக்களிடையே பிரச்னை எழுந்தது. இதனால், அப்போதைய தாசில்தார் பரிந்துரைத்ததின் பெயரில், கோவிலை, கர்நாடக ஹிந்து அறநிலைய துறை கையகப்படுத்தியது.கடந்த ஆறு ஆண்டுகளாக, நிர்வாக அதிகாரி நியமித்து, அவர் தலைமையில் அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டன.இதை எதிர்த்து, அறக்கட்டளை சார்பில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், இறுதி தீர்ப்பு வரும் வரை, மீண்டும் அறக்கட்டளையிடம் கோவிலை ஒப்படைக்கும்படி மூன்று நாட்களுக்கு முன், கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, தாசில்தார் கோவிந்தராஜு முன்னிலையில், அரசு நியமித்த, கோவில் நிர்வாக அதிகாரி சோமப்பா கடகோலா, அறக்கட்டளை தலைவர் ஸ்ரீரங்கையாவிடம், அனைத்து கோப்புகளையும் நேற்று அதிகாரபூர்வமாக ஒப்படைத்தார்.