உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

நத்தம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

 நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பலஆயிரம் பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து பூக்குழி இறங்கினர்.

இக்கோயிலில் கடந்த பிப்.15 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் இருந்து உலுப்பகுடி கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாள் விரதம் துவங்கினர். இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. பிப்.22 அன்று தேர்சட்டம் போடப்பட்டது. மறுநாள் சிம்ம வாகனத்திலும், பிப்.26 அன்று அன்ன வாகனத்திலும் அம்மன் நகர்வலம் சென்றார்.நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம், மாவிளக்கு, கரும்பு தொட்டில், அலகு குத்துதல் என நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கழுமர ஏற்றம் நடந்தது.இதையடுத்து முக்கிய நிகழ்வாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இரவு அம்மன் குளத்தில் கம்பம் விடப்பட்டது. இன்று காலை மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலமாக சென்று கோயிலை அடைவதுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !