திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்: தோளில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே திரவுபதி அம்மன் கோவில் விழாவில், தேரை தோளில் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதி கிராமத்தில் திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் தேர் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் விநாயகர், திரவுபதி, அர்சுணன், மகா விஷ்ணு ஆகிய சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. கடந்த 23ம் தேதி தர்மராஜா சுவாமிக்கும் திரவுபதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், அம்மன், அர்சுணன், மகாவிஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது . தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அர்சுணன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிறப்பு அம்சமாக 33 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோட்டையை சென்றடைந்தனர். அங்கு பாரதம் சொற்பொழிவு, கோட்டை கலைப்பு மற்றும் அரவான் களப்பலி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள், தேரை மீண்டும் தோளில் சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு, தேர் முன், சாகை வார்க்கப்பட்டது.மாலை நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.