பங்குனி உத்திர திருவிழா
நொடியில் வந்த மயில் வீரன்அருணகிரிநாதர் பக்தியையும், பாடல் திறனையும் கண்டு, சம்பந்தாண்டன் என்ற புலவர் பொறாமை கொண்டார். அவர் காளிதேவியை உபாசித்து வந்தார். திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபுதேவன் என்னும் மன்னன் முன்னிலையில் இருவரில் யாருடைய பக்தி சிறந்தது என்ற போட்டி நடந்தது. முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் திருக்காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து முயற்சி செய்தான். ஆனால் சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின் இடதுபுறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், கம்பத்து இளையனார் இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் “அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா” என்று குறிப்பிடுகிறார்.
ஆந்திராவில் ஆராமக் கோயில்கள் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த புராணச் சம்பவத்தை விளக்கும் வகையில் முருகனுக்கு தமிழ்நாட்டில் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இதேபோல், முருகன் தாரகாசுரனை வதம் செய்ததைக் குறிக்கும் வகையில் ஆந்திராவில் ஆறு தலங்கள் இருக்கின்றன. இவை ஆராமக் கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.தாரகாசுரன் அசுரனாக இருந்த போதிலும், ராவணனைப் போன்ற சிவபக்தனாகத் திகழ்ந்தான். தனது தொண்டையிலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தை வைத்து பூஜித்து வந்தான். முருகன் அவனை சம்ஹாரம் செய்தபோது வேல் அவன் தொண்டையில் பட்டதால், சிவலிங்கம் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தது. அத்தலங்களே ஆராமக்கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.அந்த இடங்களில் முருகனே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அமராவதியில் உள்ள அமரராமம், சாமல்கோட்டில் உள்ள பீமராமம், திராக்ஷராமம்,கோடிபள்ளியில் உள்ள குமார ராமம், பாலக்கொல்லுவில் உள்ள க்ஷீரராமம், பீமாவரத்தில் உள்ள சோமராமம் ஆகியவையே அந்தக் கோயில்களாகும். இத்தலங்களில் சிவ பெருமானே மூலவராக இருந்தாலும், முருகனுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது.