உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரம்: கிருஷ்ணகிரி முருகன் கோவில்களில் பூஜை

பங்குனி உத்திரம்: கிருஷ்ணகிரி முருகன் கோவில்களில் பூஜை

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த, 24ல் துவங்கியது. நேற்று, பங்குனி உத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், கல்யாண முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பர்கூர் ஜெகதேவி சாலையிலுள்ள பாலமுருகன் கோவில், சந்தூர் மாங்கனி முருகன் கோவில், போச்சம்பள்ளி அருகே அகரம் சுப்பிரமணியர் சுவாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆவத்துவாடி பஞ்., சுண்டகாப்பட்டி கந்தர் மலை வேல்முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை திருப்பூர் ஆறுமுகம் வேதங்கள் முழங்க, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆவத்தவாடி, சுண்டாகப்பட்டி, மோட்டூர், கரகூர், கரியகவுண்டனூர் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

* அரூர் அடுத்த, எல்லப்புடையாம்பட்டியிலுள்ள முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால், வேல், மயில், பறவைக் காவடி எனப் பலவகையான காவடிகளை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், அலகு குத்தியும், தேர் மற்றும் பறவைக் காவடியும் எடுத்தனர்.

* வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லுவில் உள்ள கோதண்டராமர் கோவிலின் தேரோட்டம் நடந்தது. இதில், கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !