உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குத்துக்கல்வலசை கோயிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்

குத்துக்கல்வலசை கோயிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்

தென்காசி: குத்துக்கல்வலசை அழகுநாச்சியம்மன் கோயிலில் வரும் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. குத்துக்கல்வலசை நாடார் மற்றும் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அழகுநாச்சியம்மன் கோயிலில் ராஜகோபுரம், விமானம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து வரும் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக 11ம் தேதி யாகசாலை பூஜை துவங்குகிறது. அன்று காலையில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜ பூஜை, கோ பூஜை, தீபாராதனை, ரக்ஷ பிரசாதம் வழங்கல் நடக்கிறது. 13ம் தேதி காலையில் சுதர்சன ஹோமம், சூக்த ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலையில் தீர்த்த சங்கரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, எஜமானவர்ணம், ஆச்சார்ய வர்ணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், அம்பாள் யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை துவக்கம், பூர்ணாகுதி, தீபாராதனை, நள்ளிரவில் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. ஸ்பரிசாகுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல், விமானம் கடம் எழுந்தருளல் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு விமானம், ராஜகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும், பின்னர் மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனையும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை சரவண சாஸ்திரிகள் நடத்தி வைக்கிறார். ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை முருகேசன் தலைமையில் விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !