மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்: அரியலூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 97 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய, கிராம பொதுமக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பணி துவங்கியது. இடையில் சில ஆண்டுகள் தொய்வடைந்து இருந்த கோயில் திருப்பணி நடவடிக்கைகள், கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் முயற்சியால், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் துவங்கி நடந்தது. இதையடுத்து, வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், விநாயகர், முனியப்ப ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகள் ஆலயத்துக்கு அஷ்டபந்தனம் சாத்தி, மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 5ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில், விநாயகர் முனியப்ப ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகளின் ஆலய கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் தலைமையில் நடந்த இக்கும்பாபிஷேத்தை, ராஜேந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். கும்பாபிஷேக விழாவில் கோயில் திருப்பணி குழு தலைவரும், வெங்கடகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவருமான முத்துசாமி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியன் மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கிராம நாட்டாமைகள், பொதுமக்கள், பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.