உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை

மதுரை சித்திரை திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை

மதுரை:சித்திரை திருவிழா கடந்தாண்டை போல பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் வளாகங்களுக்குள் நடக்கும், என மதுரையில் கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள், வணிகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் கலெக்டர் கூறியதாவது: தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சித்திரை திருவிழா கடந்தாண்டை போல பக்தர்கள் இன்றி ஆகமவிதிகளின்படி மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் வளாகங்களுக்குள் நடத்தப்படும், என்றார்.

மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை கூறியதாவது: மதம் சார்ந்த வழிபாடுகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த கோயில் வளாகத்திற்குள்ளேயே சித்திரை திருவிழா, மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கும். அதை பக்தர்கள் நேரடியாக பார்க்க அனுமதியில்லை. திருக்கல்யாண உற்ஸவம் அறநிலையத்துறை இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். சித்திரை திருவிழா மற்றும் நிகழ்வுகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்த கலெக்டர், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், அறநிலையத்துறை உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பின் விரிவான விவரங்கள் வெளியிடப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !