சித்திரை திருவிழா : வைகை ஆற்றில் இறங்கிய பெருமாளின் சடாரி(திருப்பாதம்)
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமாளின் சடாரி(திருப்பாதம்) வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா, மதுரை அழகர் கோவிலைப் போன்று நடப்பது வழக்கம். இந்நிலையில் ஏப்., 22-ல் உற்சவர், மூலவருக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அரசு வழிகாட்டுதலின்படி கோயில் வளாகத்திலேயே விழா நடத்தப்பட்டது. ஏப்., 26 ல் பெருமாள், கருப்பண்ண சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று காலை 9:00 மணிக்கு பெருமாள் சடாரி (திருப்பாதம்) புறப்பாடாகி, கருப்பண்ணசுவாமி வாசலில் தீபாராதனை நடந்தது. அப்போது டிரஷ்டிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டும் வைகையாற்றில் இறங்கி, ஆற்று மணலெடுத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோயிலை அடைந்தனர். கோயிலில் வைகை ஆற்று மணல் குதிரை வாகன காலடியில் சேர்க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து குறைவான பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர்.