லிங்கம்மாள் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
நாமக்கல்: பேளுக்குறிச்சி லிங்கம்மாள், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. நாமக்கல் அடுத்த பேளுக்குறிச்சியில் லிங்கம்மாள், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (14ம் தேதி) கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு மங்களை இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பாலிகை அழைத்தல், விநாயகர் பூஜை, எஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், முதல் காலயாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, நாடி சந்தானம், இரண்டாம் காலயாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு லிங்கம்மாள், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.