உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை பக்தர்கள் தரிசன டோக்கன் பெற திருப்பதியில் கவுன்டர்கள் திறப்பு

பாதயாத்திரை பக்தர்கள் தரிசன டோக்கன் பெற திருப்பதியில் கவுன்டர்கள் திறப்பு

நகரி: திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, கீழ் திருப்பதியில் டோக்கன் வழங்கும் புதிய நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் சோதனை அடிப்படையில் துவக்கியுள்ளது.

திருப்பதி ஆர்.டி.சி., பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் என அழைக்கப்படும் தேவஸ்தான தங்கும் விடுதி கட்டடத்திலும், கீழ் திருப்பதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கும் அலிபிரி சுங்கச் சாவடியிலும், இரண்டு டோக்கன் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கட்டுப்பாடு: இதனால், திருமலைக்கு அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களை கட்டுப்படுத்தி, சராசரியாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் பாதயாத்திரை பக்தர்கள் திருமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை சோதனை அடிப்படையில், மூன்று நாட்கள் வரை பரிசீலனை செய்த பின்னர், நாளொன்றுக்கு எத்தனை ஆயிரம் பேருக்கு டோக்கன் வழங்கப்படலாம் என்ற முடிவை மேற்கொள்ள உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் நாட்களில், அடுத்த நாள் சுவாமி தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்படும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டோக்கன் பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், பாதயாத்திரையாக வந்ததை உறுதிபடுத்திக் கொள்ளும் வகையில், அலிபிரி ஸ்ரீவாரிமெட்டு பரிசோதனை மையத்தில், டோக்கன் மீது முத்திரையிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், திருப்பதி விஷ்ணு நிவாஸம் கட்டடத்திலும், மேலும் ஒரு கவுன்டர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !