உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவு தேரோட்டத்துக்கு தடை: டிராக்டரில் ஸ்வாமி வீதி உலா!

இரவு தேரோட்டத்துக்கு தடை: டிராக்டரில் ஸ்வாமி வீதி உலா!

திருவண்ணாமலை: ஆரணி அருகே இரவு தேரோட்டத்துக்கு போலீஸார் தடை விதித்ததால், டிராக்டரில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. தேர் இழுக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆரணி அடுத்த ஆதனூரில், கிராம தேவதையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் இரவு, பகல் என இரு முறை பிரமாண்டமான முறையில் தேர் திருவிழா நடத்துவது வழக்கம். இதை காண ஆதனூர், கீழையூர், விருபாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபடுவர். கடந்த மே 1ம் தேதி ஆரணி கோட்டை கையிலாய நாதர் கோவில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்ததில், ஐந்து பேர் பலியாகினர். இதே போல் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, இரவில் தேரோட்டம் நடத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. பகலில் மட்டும் தேரோட்டம் நடத்தலாம் என அரசு அனுமதி அளித்தது. கடந்த மாதம் ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் இரவு தேரோட்டத்தை நடத்த கூடாது என போலீஸார் எச்சரித்தனர். அதனை மீறி தேரோட்டம் நடத்த முயன்றதால் லேசான தடியடி மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆதனூர் செல்லியம்மன் கோவிலில் பகல், இரவு தேர் வீதி உலாவை நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையும் நடத்த கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வந்தனர். தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தேர் வடம் பிடிக்க ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கு குவிந்தனர். கிராமம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த ஆரணி டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் ஆதனூர் கிராமத்துக்கு சென்று இரவு தேரோட்டம் நடத்த கூடாது என்றும், தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீற கூடாது என்று எச்சரித்தார். இதனையடுத்து தேரில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த உற்சவ மூர்த்தியை, டிராக்டரில் ஏற்றிவீதி உலா நடத்தினர். இதனால், தேர் வடம் பிடிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !