திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 15வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப்நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், 14 கி.மீ துாரமுள்ள மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. எனவே நேற்று இரவு, 8:02 மணி முதல், இன்று, 26ல், மாலை, 5:36 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம். தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு, பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால், கடந்த ,15வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.