பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழா நிறைவு
ADDED :1663 days ago
சேலம்: மகாலட்சுமி தாயார் வசந்த விழா அனுமந்த சேவையுடன் நிறைவடைந்தது. சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும், அக்னி நட்சத்திர உக்கிரம் தணிய, பெருமாளுக்கு வசந்த விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல், மகாலட்சுமி தாயாருக்கும் வசந்த விழா நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த மே, 31ல் தொடங்கிய விழாவில், தினமும் மாலை விதவித அலங்காரங்களில் தாயாரை எழுந்தருளச்செய்தனர். நிறைவு நாளான நேற்று, சர்வ அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளச்செய்தனர். மேலும், அனைத்து வித நோய்களில் இருந்து மக்கள் விடுபட்டு நோய் நொடியின்றி வாழ வேண்டி பட்டாச்சாரியார்களால் தன்வந்திரி, சுதர்சன மகா மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடால், பக்தர்கள் யாருமின்றி, பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.