சைவ சித்தாந்த பெருமன்ற 107வது மாநாடு நிறைவு
தஞ்சாவூர்: தஞ்சையில் சைவ சித்தாந்த பெருமன்ற 107வது ஆண்டு விழா மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று திருப்பனந்தாள் ஸ்ரீ காசி திருமடம் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஸ்வாமிகள் பங்கேற்று பேசினார். தஞ்சை வ.உ.சி., நகர் காமாட்சி ஹாலில் சைவ சித்தாந்த பெருமன்றத்தின் 107வது ஆண்டு விழா மாநாடு கடந்த 15ம் தேதி துவங்கியது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு பெருமன்ற தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார். துணை த்தலைவர்கள் வீரப்பன், ரகுபாய், பொதுச்செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரம், அறக்கட்டளை சொற்பொழிவு செயலர் ராமலிங்கம், நூலக செயலர் திருமறை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமுறை பண்ணிசையை அரநமசிவாய ஸ்வாமி, பாலமுருகன், திருநாவுக்கரசு, முருகானந்தம் ஆகியோர் இசைத்தனர். குத்துவிளக்கை முனைவர் கோமதி, பர்வதவர்த்தினி ஆகியோர் ஏற்றி வைத்தனர். பெருமன்ற பொருளாளர் சுந்தரம் வரவேற்றார். ஆண்டறிக்கையை பொதுச்செயலர் சந்திரசேகரன் வாசித்தார். தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி சுந்தரேசுவரர் திருமடம் மடாதிபதி சொக்கலிங்கம் ஸ்வாமி பூஜைகளை முன்னின்று நடத்தினார். இதையடுத்து, சைவ மகளிர் மாநாடு, சைவ இளைஞர் மாநாடு ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மூன்றாம்நாள் நிகழ்ச்சியில் பெருமன்ற செயற்குழு உறுப்பினர் முத்து, பேராசிரியர் கங்காதரன், புலவர் வேலாயுதன், தஞ்சை சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர் திருநாவுக்கரசு, தஞ்சை தமிழ்ப்பல்கலை பேராசிரியர் குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி திருமடம் இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஸ்வாமிகள் பேசுகையில், ""மனிதர்கள் பூர்வ ஜென்மத்தில் ஆற்றிய செயல்களுக்கு ஏற்றவாறு மனிதர்களுக்கு நல்வினை, தீவினை என இரண்டும் வருகிறது. இது மனிதர்களுக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். பொதுவாக மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் இன்பத்தை விரும்புகின்றனர். ஆனால், துன்பத்தை கண்டால் மட்டும் விலகி ஓடுகின்றனர். ஆனால் இரண்டையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். சைவ சிந்தாந்த முறை மட்டும் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப, துன்பங்களை எப்படி எதிர்கொள்வது? என்னும் வழிமுறையை நடைமுறைக்கு ஏற்ப போதிக்கிறது, என்று பேசினார். மாநாட்டில் மூன்று நாட்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு பயனடைந்தனர்.