வடபழநி கோவில் நிலம் மீட்பு ஹிந்து முன்னணி பாராட்டு
திருப்பூர்:வடபழநி ஆண்டவர் கோவில் நிலத்தை மீட்ட, அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடு பாராட்டுக்குரியது, என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றவுடன், கோவில் நிலங்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறார். கோவில் சொத்து, நிலம், நகை என அனைத்தையும் ஆவணப்படுத்த உத்தரவிட்டுள்ளார். அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளதையும், அதை நிரூபிக்கும் வகையிலான செயல்பாடுகளையும் வரவேற்கிறோம்.போலி ஆவணங்களால், கோவில் நிலங்களை பட்டா மாறுதல் செய்தனர். இவற்றை கவனித்து தக்க நடவடிக்கை எடுத்து, ஒரு கால பூஜை கூட நடக்காமல் உள்ள கோவில்களில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.