திருமலையில் தண்ணீர் பஞ்சம்: வருண யாகம் நடத்த ஏற்பாடு!
நகரி: திருமலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மழை வேண்டி வரும், 22 முதல் 26 வரை, வருண யாகம் நடத்த உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் பாபிராஜு தெரிவித்தார். திருமலையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருமலையில், ஆண்டுதோறும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால், சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதி முடிந்தவுடன், திருமலையில் உள்ள கனகதாரா, பசுபுதாரா நீர்த்தேக்கங்களில் இருந்து திருமலைக்கு தண்ணீர் சப்ளைக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமலையில் மழை வேண்டி வரும், 22 முதல் 26 வரை, திருமலையில் வருண யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.