கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஜூன் 27ம் தேதி சிரசு ஊர்வலம்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர், கெங்கையம்மன் கோவில் திருவிழாவின் சிகரமாக சிரசு ஊர்வலம், வரும் 27ல் நடக்கிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கெங்கையம்மன் கோவில், 80வது ஆண்டு திருவிழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. இரவு 7 மணியளவில், கெங்கையம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினசரி, காலை, மாலை இருவேளையும், சிறப்பு அலங்காரத்தில், அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் சிகரமாக, வரும் 26ல், காலை 9 மணிக்கு கெங்கையம்மன், சக்தி மாரியம்மன், பொன்னியம்மன், மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணியளவில், திருப்பதி கெங்கையம்மனை அழைத்தல், பகல் 12 மணியளவில் சக்தி மாரியம்மன், கெங்கையம்மனுக்கு, பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மாலை 5 மணியளவில், பூங்கரகம் முக்கிய வீதிகளில் கொண்டு வரப்பட்டு கோவிலை சென்றடைகிறது. மறுநாள் 27ம் தேதி அதிகாலை 4 மணியளவில், சகலபம்பை, தாரை, தப்பட்டை, நாதஸ்வர கச்சேரி முழுங்க பெரிய குளத்தில் இருந்து திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகளில் வலம் வந்த பின், பகல் 1.35 மணியளவில் கோவிலை வந்தடைகின்றன. அப்போது, வீதியின் இருபுறமும் திரண்டு வரும் பக்தர்கள், உப்பு, மிளகு உள்ளிட்ட தானிய வகைகளை அம்மன் சிரசு மீது வீசி, பிரார்த்தனையை நிறைவேற்றுவர். தொடர்ந்து, மாலை 4 மணியளவில், அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 8 மணியளவில், கண்கவர் வாண வேடிக்கையும், 9.30 மணியளவில் மேள, தாளம் முழங்க திருப்பதி கெங்கையம்மன் சிரசு புறப்பட்டு, பெரியகுளத்தை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.