திருமலைக்கோயிலில் வேண்டாமே .. சிறப்பு கட்டண தரிசனம் முறை!
தென்காசி: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் சிறப்பு கட்டண தரிசனம் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து சமுதாய கூட்டமைப்பு பேரவை தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:""தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்களும் வருவது வழக்கம். மலை குன்றின் மீதுள்ள திருமலைக்குமாரசுவாமியை வழிபட தற்போது மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.திருமலைக்குமாரசுவாமி கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் தர்ம தரிசனம் வழியாகவும், சிறப்பு கட்டண தரிசனம் வழியாகவும் செல்ல வேண்டியுள்ளது. இறைவன் சன்னதி முன்பு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே பக்தர்களை பிளவு படுத்தி பார்ப்பது வேதனைப்பட வைக்கிறது.மானசரோவர் கோயிலுக்கு புனித யாத்திரை சென்றுவர பக்தர்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்கி வருகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் கட்டண தரிசனம் வைத்திருப்பது தேவையற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை உணர்ந்து கட்டண தரிசனம் முறையை அகற்ற வேண்டும் என ஈஸ்வரன் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.