ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
ஆனைமலை, தர்மராஜா திரவுபதிஅம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விரத பூஜையுடன் குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 15ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, சர்க்கார்பதியில் இருந்து, 85 அடி உயர கம்பம் கொண்டு வரப்பட்டு, சேத்துமடை தெய்வகுளம் காளியம்மன் கோவில், ஆனைமலை மாகாளியம்மன் கோவில்களில் பூஜை செய்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடந்த, 16ம் தேதி நடப்பட்டன. கடந்த, 22ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், 60 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இன்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்பின், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. நாளை (6ம் தேதி) திருத்தேர் நிலை நிறுத்தல்; ஊஞ்சல் பட்டாபிேஷகம் நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவையொட்டி கோவிலில் தினமும், காலை, 10:30 மணி, இரவு, 7:00 மணிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.