உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெருவுடையார் கோவில் வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்!

தஞ்சை பெருவுடையார் கோவில் வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் கோவிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி 10ம் ஆண்டு பெருவிழா இன்று (19ம் தேதி) துவங்குகிறது. இவ்விழா வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் 88 கோவில்களில் ஒன்றாக பெருவுடையார் கோவில் விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா, அமாவாசை தினமான இன்று (19ம் தேதி) துவங்குகிறது. நாளை மாலை அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆறு மணி முதல் 7.30 மணி வரை தஞ்சை பத்மனாபன் குழுவினரின் மங்கள இசை , 7.31 மணிக்கு ஸ்ரீரங்கம் லாஸ்ய ருத்யாலயா துஷாரா சாய் ஸ்ரீனிவாஸ் வழங்கும் பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது. வரும் 20ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், மாலையில் 6.30 மணிக்கு சாரதா மணி, சுகன்யா குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி, 21ம் தேதி குங்குமம் அலங்காரம் மாலை 6.30 மணிக்கு ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இன்னிசை, 22ம் தேதி சந்தனம் அலங்காரமும், மாலையில் தஞ்சை வடிவுதேவி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 23ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், செல்வி சுசித்ரா வாய்ப்பாட்டு, நடராஜன் வயலின், சங்கரசுப்பிரமணியன் மிருதங்கம், 24ம் தேதி மாதுளை அலங்காரமும், தஞ்சை கோவிந்தராஜனின் லயநாத இன்பம், வடுவூர் கிருஷ்ணமூர்த்தி நாதஸ்வரம், சாலியமங்கலம் ராமதாஸ் வீணை, சின்னமனூர் வீரமணிகண்டராஜன் சாக்ஸாஃபோன், சங்கரசுப்பிரமணியன் மிருதங்கம், தீனதயாள் முகர்சிங் இசை நிகழ்ச்சி, 25ம் தேதி நவதான்யம் அலங்காரமும், துரை செந்தில்குமார் லயகான நாத சங்கமம், பாஸ்கரன் சங்கமம், ராஜா ஸ்ரீவாஸன் வாய்ப்பாட்டு, குடந்தை பாலமுரளி வயலின், சதீஸ்குமார் மிருதங்கம் இசைநிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து, 26ம் தேதி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரமும், சீர்காழி சிவசிதம்பரம் வாய்ப்பாட்டு, சத்தியமூர்த்தி வயலின், சங்கரசுப்பிரமணியன் மிருதங்கம், ராஜேந்திரன் முகர்சிங் இசை நிகழ்ச்சி, 27ம் தேதி கனிவகை அலங்காரமும் கிருஷ்ணகுமார் வாய்ப்பாட்டு, ராம்பிரசாத் வயலின், சங்கரசுப்பிரமணியன் மிருதங்கம், பரமசிவம் கஞ்சிரா, ராஜேந்திரன் முகர்சிங் ஆகிய இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 28ம் தேதி அம்மனுக்கு காய்கறி அலங்காரமும், மாலை 6.30 மணிக்கு சுரேஷ்பாபு குழுவினரின் வயலின் இன்னிசை நிகழ்ச்சி, 29ம் தேதி புஷ்பம் அலங்காரமும் மாலை ஆறு மணி முதல் 7.15 மணி வரை காஷ்ய மகேஷ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி, 7.30 மணி முதல் ஒன்பது மணி வரை உமாமகேஸ்வரி, ராஜேஸ்வரி நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி மாலை ஐந்து மணிக்கு அம்மன் திருவீதியுலா நடக்கிறது. இதையொட்டி நந்தகுமார் குழுவினரின் கேரள ஜெண்டை வாத்தியம், திருவண்ணாமலை ஒடல் வாத்தியம், நாதஸ்வரம் முழங்க வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் அம்மன் நான்கு வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில், ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், கண்காணிப்பாளர்கள் அசோகன், ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன் மற்றும் ஆஷாட நவராத்திரி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !