உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்நாடகா அறநிலையத்துறைக்கு ரூ.105 கோடி வருவாய் இழப்பு

கர்நாடகா அறநிலையத்துறைக்கு ரூ.105 கோடி வருவாய் இழப்பு

 பெங்களூரு : ஊரடங்கால் பொது மக்கள் மட்டுமின்றி கோவில்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அறநிலையத்துறைக்கு, 105 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில், கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிப்படைந்தனர். இதற்கு கோவில்களும் விதிவிலக்கல்ல. மாநிலத்தின் அனைத்து கோவில்களின் உண்டியல்கள், காலியாக உள்ளது. அறநிலையத்துறைக்கு, 105 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில், அறநிலையத் துறையில், 34 ஆயிரம் கோவில்கள் உள்ளன. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட, ஏ பிரிவில் 144 கோவில்கள் உள்ளன.ஊரடங்கால் பக்தர்கள், கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கபட்டிருந்தது; இன்னும் திறக்கப்படவில்லை. பக்தர்கள் வராததால், கோவில்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை.

மாநிலத்தின் நம்பர்- 1 கோவிலான, குக்கே சுப்ரமண்யாவுக்கு, 22 கோடி ரூபாய்; தட்சிண கன்னடாவின், முக்கிய கோவில்களான கட்டீலு துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு 7 கோடி; மஹாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு 1.5 கோடி.கத்ரி மஞ்சுநாதேஸ்வரர் கோவிலுக்கு 2 கோடி; போளலி ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி கூறுகையில், கோவில்களுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி, இன்னும் பட்டியல் வரவில்லை. ஆனால் இம்முறை அனைத்து கோவில்களுக்கும், 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !