உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் வருமானம் பாதிக்காத வகையில் வாடகை திருத்தம்!

கோவில் வருமானம் பாதிக்காத வகையில் வாடகை திருத்தம்!

 சென்னை : கோவில் நிலங்களுக்கான வாடகை, மக்களையும், கோவிலுக்கான வருவாயையும் பாதிக்காமல், நியாயமானதாக இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் இனி வழங்கப்படாது, என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை, வடபழநி ஆதிமூலப் பெருமாள் கோவிலில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது; திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவது; முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகியவை குறித்து, அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:இந்தக் கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பக்தர்களின் மரண பயம் போக்கி, தேக ஆரோக்கியத்தை கொடுக்கும் சிறந்த தலம். ஆண்டிற்கு 7.5 லட்சம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கும் இந்தக் கோவிலில், 1960ம் ஆண்டிற்கு பின் திருப்பணி நடக்கவில்லை.

100 கோடி ரூபாய்: பழமையான கோவில்களை சீரமைக்க, முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாயில், இந்தக் கோவிலில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.கோவிலின் முன்புறம் உள்ள கடைகள் அகற்றப்படும். அதே நேரம், வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாத வண்ணம் மாற்று இடம் வழங்கப்படும்.ஜமீன் பல்லாவரம் பகுதியில், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அதற்கு துணையாக மின் இணைப்பு வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவில் நிலங்களுக்கான வாடகை, 2015ம் ஆண்டு திருத்தங்களின் படி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, மக்களையும், கோவில் வருமானத்தையும் பாதிக்காத வகையில், நியாயமான வாடகை நிர்ணயம் செய்து, திருத்தி அமைக்கப்படும்.ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டம் 78ன் படி, ஆக்கிரமிப்பு வெளியேற்றும் சட்டம் வாயிலாக, இனி யாருக்கும் பட்டா வழங்கப்பட மாட்டாது.அதே நேரம் நீண்ட காலம், குழுவாக ஒரே பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை, வாடகை தாரராக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

ஆலோசகராக நியமனம்: பொன் மாணிக்கவேல், மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆலோசகராக நியமனம் செய்வது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பின், வடபழநி ஆண்டவர் கோவிலின் உப கோவிலான புலியூர் பரத்வாஜேஸ்வர் கோவில் இடத்தில் இயங்கும், சூளைமேடு அஞ்சுகம் அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், மண்டல இணை கமிஷனர் ஹரிபிரியா, துணை கமிஷனர் சித்ராதேவி, எல்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !