சத்தியமங்கலம்: பண்ணாரி கோவிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மாதாந்திர அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் திரள்வர். நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. அம்மன் பக்தர்களுக்கு தங்க கவசத்தில் அருள் பாலித்தார். காலை 6 மணி முதல் பக்தர்கள் திரண்டனர். மதியம் உச்சிகால பூஜையில், கோவிலைச் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தனர்.திருப்பூர், கோபி, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டு, நேற்று காலை பண்ணாரி கோவிலை அடைந்து, அம்மனை வணங்கிச் சென்றனர். மாலை 6 மணி பூஜை முடிந்து, தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. சத்தியமங்கலத்தில் இருந்து, பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.