ஆடி அமாவாசை சேதுக்கரையில் பக்தர்கள் நீராடுவதற்கு தடை
சேதுக்கரை: கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதற்குரிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆக., 8 அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக வருகை தருவது வழக்கம். இந்நிலையில் புனித நீராடுதல் உள்ளிட்ட கடற்கரையோர சடங்குகள் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. திருப்புல்லாணி யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, ஆடி அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் பக்தர்கள் கூடுவதற்கும் நீராடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. சேதுக்கரை வரக்கூடிய வழித்தடங்களில் போலீசார் மூலம் பேரிகார்டு அமைத்து தடுப்பு ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. ஆகவே பக்தர்கள் ஒத்துழைப்பு அளித்து அன்றைய தினம் சேதுக்கரைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.