சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை
சூலூர்: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, சூலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் உள்ளிட்ட விஷேச நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். ஆடியில் வரும் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் சிறப்பாக நடக்கும். கொரோனா பரவல் காரணமாக, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பூஜைகள் மட்டும் நடந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பதால், சூலூர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டார கிராமக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அரசூர் அடுத்த பசசாபாளையம் அழகு நாச்சியம்மன் கோவில், அரசூர் அங்காளம்மன் கோவில், கரவளி மாதப்பூர் மாதாங்கி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.