நங்கநல்லுார் கோவிலில் சிலைகள் கொள்ளை
ADDED :1518 days ago
பழவந்தாங்கல்: நங்கநல்லுார் விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து, இரண்டு சிலைகள் மற்றும் உண்டியலை கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
நங்கநல்லுார், லட்சுமி நகர் 3வது பிரதான சாலையில், விநாயகர் கோவில் உள்ளது. நேற்று காலை, கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி, 72, கோவிலை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.கோவிலில் இருந்த, ஒன்றரை அடி உயர விநாயகர் ஐம்பொன்சிலை, அய்யப்பன் வெண்கல சிலை மற்றும் உண்டியல் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் தர்மகர்த்தா சிவராமகிருஷ்ணன், பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கோவில் எதிரே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.அதில், மூன்று மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து, கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. அதை வைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர்.