பிரச்னைகள் வெளியில் இருந்து வருவதில்லை: அனைத்திற்கும் மனமே பிரதானம்
புதுச்சேரி:ஈஷா அறக்கட்டளை சார்பில், சத்குரு ஜக்கி வாசுதேவ் நேரடியாக நடத்தும் ஈஷா யோகா பயிற்சி முகாம், புதுச்சேரியில் நேற்று கோலாகலமாகத் துவங்கியது.லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில், சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. நேற்று மாலை 6 மணியளவில் அறிமுக வகுப்பு நிகழ்ச்சி துவங்கியது. 6.17 மணிக்கு சத்குரு மேடைக்கு வந்தார்.முகாமில் அவர் பேசியதாவது:மனித உடல், மனம், உணர்வு, உயிர் சக்தி குறித்து விளக்கவுரையாற்றினார். மனித மனம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடையக்கூடியது. மனிதக் குரங்கிற்கும், மனிதனுக்கும் 1.23 சதவிகித அளவுதான் மாறுபாடு உள்ளது. மனத்தை உன்னதப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும். ஷம்பவி மகா முத்ரா யோகப் பயிற்சி ஒரு தொழில்நுட்பம் போன்றது. இதுகுறித்த ஆய்வு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த யோகா பயிற்சியை மூன்று மாதம் தொடர்ந்து மேற்கொள்ளும் போது, மனித உடலில் 240 சதவிகிதம் மாற்றம் நிகழ்ந்துள்ளது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சி மேற்கொண்டால் வாழ்க்கைக்குரிய பிற தேவைகளை எளிதாகப் பெற முடியும். மனிதர்கள் பாதுகாப்பினைத் தேடி வருகின்றனர். உண்மையான பாதுகாப்பு உள்மனத்தை உணர்ந்தால் தெரிந்துவிடும். வாழ்க்கை அனைவருக்கும் தற்செயலாக நடந்து கொண்டுள்ளது. சூரியன் தினந்தோறும் வருகிறது. ஆனால் அதுவரவில்லை என்றால் 18 மணி நேரத்தில் கடல்கள் அனைத்தும் ஐஸ் ஆகி விடும். எனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும் தெரியாததைத் தெரியாது என்றும் கூறும் மனநிலையை நாம் பெற வேண்டும். பிரச்னை என்பது வெளியில் இருந்து வருவதில்லை. அனைத்திற்கும் மனமே பிரதானமாக உள்ளது. பிறரைத் திருத்துவது நமது வேலையல்ல. நாம் திருந்த வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மனம், உடல் இவற்றிற்கான இடைவெளியை தியானம் மூலம் உணரலாம். உண்மையான ஆனந்தம் எது என்பதை தியான யோகப் பயிற்சிகள் மூலம் உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதனையடுத்து ஈஷா, கிரியா யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்.இன்று காலை 7.30 மணிக்கு "ஷம்பவி மகா முத்ரா குறித்த பயிற்சி வகுப்பினை நடத்த உள்ளார். இப்பயிற்சி நாளை (24ம் தேதி) நிறைவடைகிறது.அறிமுக வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்பில் அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 7.30 மணிக்குத் துவங்கும் பயிற்சி வகுப்பு இரவு 7 மணிக்கு நிறைவடையும்.நேற்று நடந்த அறிமுக வகுப்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. முகாம் ஏற்பாடுகளை ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர்.