உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம்

திருப்பதியில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம்

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவம், செப்., 18 முதல் 26ம் தேதி வரையிலும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்., 15 முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. திருமலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரண்டு பிரம்மோற்சவ விழாக்களையும் சிறப்பாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.

பக்தர்களின் தலைமுடி ஏலம்: ரூ. 61.72 கோடி வருமானம்

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை ஏலம் விட்டதில், தேவஸ்தான நிர்வாகத்திற்கு, 61 கோடியே 72 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதுவரை சேகரிக்கப்பட்டிருந்த, 89 டன், 413 கிலோ தலைமுடியை தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் இணையதளம் மூலம் ஏலம் விட்டது. இந்த தலைமுடி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என, தரம் பிரிக்கப்பட்டது. இவற்றில், வெள்ளை முடியும் சேர்ந்துள்ளது. இவற்றில், 16 முதல், 30 அங்குல நீளம் உள்ள தலைமுடி, இரண்டாம் தரமாக ஏலம் விடப்பட்டது. இதில், 28 ஆயிரத்து 700 கிலோ விற்பனையானது. இதன் மூலம், 53 கோடியே 54 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. மூன்றாவது ரகம், 8 ஆயிரத்து 300 கிலோ அளவுக்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம், 6 கோடியே 18 லட்ச ரூபாயும், நான்காவது ரகம், 1,717 கிலோ விற்பனையானதன் மூலம், 93 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும், வருமானம் கிடைத்தது. ஐந்தாவது ரகம், 50 ஆயிரம் கிலோ விற்பனை செய்யப்பட்டதில், 40 லட்ச ரூபாயும், வெள்ளை முடி விற்பனை மூலம், 65 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் வருமானமாக கிடைத்தது. இவ்வாறு மொத்தம், 61 கோடியே 72 லட்ச ரூபாய் தலைமுடி ஏலத்தின் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !