தூத்துக்குடி பெருமாள் கோயில் உண்டியல் 5 மாதத்திற்கு பின் திறப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டன. 5 மாதத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 370 ரூபாய் உண்டியலில் காணிக்கை இருந்தது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. கோடீஸ்வர பெருமாளாக பெருமாள் ஆகிய பிறகு சனிக்கிழமைகளில் வரும் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வைகுண்டபதி பெருமாள் கோயில் காணிக்கை உண்டியல் எண்ணப்பட்டன. காலையில் துவங்கிய எண்ணும் பணி மதியம் வரை நீடித்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன் தலைமையில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டன. மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 370 ரூபாய் உண்டியலில் பணம் இருந்தது. பின்னர் இவை கோயில் பெயரில் பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டன. அறநிலையத்துறை ஆய்வாளர் நயினார், கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பாலாஜி, கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடைசியாக உண்டியல் 12.1.2012 அன்று திறக்கப்பட்டது. ஐந்து மாத கால இடைவெளிக்கு பிறகு நேற்று உண்டியல் திறக்கப்பட்டன. வைகாசி பெருந்திருவிழா, திருக்கல்யாண விழா உள்ளிட்டவை நடந்துள்ளதால் கோயிலில் உண்டியல் பணம் கடந்த முறை போல் வந்திருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.