கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக நான்கு தேரோட்டம்
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை மகாமகமும், ஆண்டுதோறும் மாசி மதம் மாசிமகமும் நடைபெறும். இந்நிலையில், மாசிமக விழாவையொட்டி, ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய ஆறு சிவாலயங்களில், கடந்த பிப்.21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 63 நாயனர்மார்கள் வீதியுலா, ஓலைசப்பர வீதியுலா, பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்பாள், விநாயகர், முருகன் ஆகிய நான்கு சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மார்ச் 1 சண்டிகேஸ்வரர், காலஹஸ்தீஸ்வரர் மற்றும் சோமேஸ்வரர் கோவில்களின் தேரோடும் வீதிகளில் தேரோட்டமும், காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய மூன்று கோவிலின் தேரோட்டம் மகாமக குளத்தை சுற்றி நடைபெறுகிறது. மார்ச் 2ம் தேதி 11 சிவன் கோவில் சுவாமிகள், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வீதியுலாவாக மகா மககுளக்கரையில் எழுந்தருளி பகல் 12:00 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று பெருமாள் கோவில்களில் மாசி மகமான மார்ச் 2ம் தேதி, காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் திருத்தேரோட்டம், தொடர்ந்து பெருமாள் உபயநாச்சியாருடன், பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.