உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.3.4 கோடி லட்டு மோசடி; ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.3.4 கோடி லட்டு மோசடி; ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் லட்டு விற்பனையில் ரூ. 3.4 கோடி மோசடி செய்த ஊழியர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டார்.


இக்கோயிலில் தினமும் பிரசாதமாக 30 கிராமில் 1520 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 50 கிராமில் ஒரு லட்டு ரூ.15 வீதம் கோயில் வளாகத்தில் உள்ள கவுண்டரில் விற்கப்படுகிறது. விற்பனையை கண்காணிக்க இளநிலை உதவியாளர் பஞ்சமூர்த்தி நியமிக்கப்பட்டார். விற்கப்படும் லட்டு எண்ணிக்கையில் பாதிக்கு அவர் சொந்த கணக்கில் மூலப்பொருட்களை வாங்கி தந்து, லட்டுக்கள் தயாரித்து விற்று பாதி வருவாயை சொந்த கணக்கில் எடுத்துக்கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மே3ல் தினமலர் நாளிதழில் டீ கடை பெஞ்சில் செய்தி வந்தது.


லட்டு மோசடி குறித்து விசாரித்த இணை ஆணையர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கை: மார்ச் 14ல் லட்டு தயாரிப்பு கூடத்தில் ஆய்வு செய்ததில் மூலப் பொருளின் இருப்பு குறைவாக இருந்தது. 2023--26 பிப்ரவரி வரை லட்டு விற்பனையை குறைவாக கணக்கு காட்டினர். ஆய்வுக்குப் பின் கூடுதலாக லட்டு விற்பனையாகி உள்ளது. இலவச லட்டு வழங்கியதில் மோசடி செய்தும், தனியாக கவுன்டரில் விற்கும் லட்டுகளில் கூடுதல் லட்டுகளை தயாரித்து விற்று சொந்த கணக்கில் வரவு வைத்து கொண்ட விதத்திலும் 3 ஆண்டில் 22.71 லட்சம் லட்டுகள் விற்ற வகையில் ரூ. 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் மோசடி நடந்துள்ளது. இதற்கு காரணமான பஞ்சமூர்த்தி, உடந்தையாக இருந்த கோயில் ஊழியர்களான விக்ரம்(பஞ்சமூர்த்தியின் மகன்), விற்பனையாளர்கள் சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !