ராமேஸ்வரம் அக்னி கரையில் மாடுகள் உலா : பக்தர்கள் அச்சம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் ஏராளமான மாடுகள் உலா வருவதால், பக்தர்கள் அச்சத்துடன் நீராடி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலில் தரிசனம் செய்வர். ஆனால் கால்நடைகள் வளர்ப்போர் பக்தரிடம் மாடு, ஆடுக்கு தானமாக கீரை விழங்க வலியுறுத்துவதால், கீரை வியாபாரமும் சூடு பிடிக்கிறது. இதனால் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ஆடு, மாடுகள் உலா வருகிறது. கீரை உண்ணும் ஆர்வத்தில் மாடுகள் பக்தர்களை முட்டி கீழே தள்ளிவிட்டு வருவதால், பலர் காயம் அடைகின்றனர். இதனால் பக்தர்கள் பீதியில் நீராடி செல்கின்றனர். எனவே உயர்நீதிமன்ற அலியுறுத்தலின்படி பக்தர்களை அச்சுறுத்தும் கால்நடையை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து கீரை தானம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.