அறநிலையத்துறை அலுவலகம் ராமநாதபுரத்திற்கு மாற்ற கோரிக்கை
  கடலாடி : பரமக்குடியில் வாடகை கட்டடத்தில் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை ராமநாதபுரத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பூஜாரிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
கோயில் பூஜாரிகள் நலச்சங்க மண்டலத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4900 பேர் கோயில் பூஜாரிகளாக பணி செய்கிறோம்.50 வயதை கடந்த பூஜாரிகள் அதிகம் உள்ளனர். தற்போது பரமக்குடியில் வாடகை கட்டடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் பல வருடங்களாக இயங்கி வருகிறது. கிராமங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இங்கு வருகின்றனர். இடப் பற்றாக்குறையால் வெளியிலேயே நிற்க வைக்கின்றனர். இது பூஜாரிகளுக்கு சிரமமாக உள்ளது.எனவே போக்குவரத்து வசதிக்கு ஏற்ற வகையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கட்டடத்தில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை அமைத்தால் அனைத்து பூஜாரிகளுக்கும் பயனுள்ளதாக அமையும், என்றார்.