உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலைநயம் மிக்க சூரியக்கோயில்

கலைநயம் மிக்க சூரியக்கோயில்

  குஜராத்தில் உள்ள மோதேரா என்ற இடத்தில் காணப்படுகிறது கலைநயம் மிக்க சூரியக்கோயில்.   அகமதாபாதிலிருந்து 106 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் பதினோராம் நுாற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீமனால் கட்டப்பட்டது.  
கோயிலின் வெளியே காணப்படும் ராமகுண்ட குளம் மனதை மயக்குகிறது. பெரிய, ஆழமான குளம். இதில் மக்கள் இறங்கி நீராட வசதியாக நுாற்றுக்கணக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிக்கட்டுகளுக்கு இடையே அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஹிந்து கடவுளர்களின் 108 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குளத்தின் நான்கு முகப்பு மேடைகளில் சிறு பிரமிடு வடிவத்தில் படிக்கட்டுகள் உள்ளன. இந்த முகப்பு மேடைகளில் விஷ்ணு, கணபதி, நடராஜர், பார்வதியின் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அலங்காரமாக செதுக்கப்பட்ட துாண்கள்,  கூரைகள் கொண்டதாக இந்த கோயிலின் சபா மண்டபம் உள்ளது.  அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 52 துாண்களைக் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டின் 52 வாரங்களைக் குறிக்கின்றன.  இத்துாண்களில் மகாபாரதம், கிருஷ்ண லீலைகள் நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கருவறையில் சூரியன் தேரில் அமர்ந்து குதிரைகளை ஓட்டும் நிலையில் காணப்படுகிறார்.  முழுவதும் தங்கத்தால் ஆன இச்சிலையில் ஒரு பகுதியை கஜினி முகமது என்ற முகலாய மன்னன் உடைத்து எடுத்துச் சென்றான்.
கவிழ்ந்த தாமரை வடிவத்தில் கருவறையின் மேல் விதானம் அமைந்துள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் சூரியனின் 12 நிலைகளை எடுத்துக் காட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
மோதேரா சூரியன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் நாட்டியக் கலைஞர்களால் நாட்டியாஞ்சலி திருவிழா மூன்று நாள் நடக்கிறது.
 சூரியனுக்கான வேறு கோயில்களும் நம் நாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் சூரியனார் கோவில், ஒடிசாவில் கொனாரக் , வடகிழக்கு இந்தியாவில் சூரிய பஹார், மத்தியப் பிரதேசத்தில் உனாஓ என்ற பகுதியிலுள்ள சூரியக்கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள மார்தானா என்னும் இடத்தில் ஒரு காலத்தில் பிரம்மாண்டமான சூரியக்கோயில்  இருந்ததற்கான மிச்சப் பகுதிகளை தற்போது காண முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !