உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் விழா தடையை நீக்க கிராம மக்கள் கோரிக்கை!

மாரியம்மன் கோவில் விழா தடையை நீக்க கிராம மக்கள் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி : வினைதீர்த்தாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு போடப்பட்ட தடையை நீக்ககோரி கிராம மக்கள் ஆர்.டி.ஓ., வை சந்தித்து மனு கொடுத்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த வினைதீர்த்தாபுரத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக மாரியம்மன் கோவில் திருவிழா நடத்த தாசில்தார் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு தடை விதித்தார். இந்நிலையில் அந்த தடை உத்தரவை நீக்கி திருவிழா நடத்த அனுமதி தர வேண்டும் என கோரி ஊராட்சி தலைவர் ஆதிமூலம் தலைமையில் 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று ஆர்.டி.ஓ., உமாபதியை சந்தித்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: வினைதீர்த்தாபுரம் கிராமத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து விழா நடத்தி வந்தோம். முன்னாள் தலைவர் செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பொய்யான தகவல்களை கூறியதால் தடை உத்தரவு போடப்பட்டு இரண்டு ஆண்டாக திருவிழா நடத்தப்படவில்லை. ஒற்றுமையாக வாழும் எங்களுக்கு திருவிழா நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !