உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோவில்களில் வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம்

சென்னை கோவில்களில் வாழை இலையில் பக்தர்களுக்கு அன்னதானம்

சென்னை: கோவில்களில் நேற்று முதல், வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுதும் உள்ள 754 கோவில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்துார், சமயபுரம், திருத்தணி ஆகிய பிரசித்தி பெற்ற கோவில்களில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, ௨௦௨௦ மார்ச் மாத இறுதியில், பக்தர்கள் தரிசனம், அன்னதானம் திட்டம் நிறுத்தப்பட்டது. கோவிலை சுற்றி வசிக்கும் ஏழை, எளிய பக்தர்கள் கோரிக்கை தொடர்பான, நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, பிரதான கோவில்கள் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.புதிய அரசு பொறுப்பேற்றவுடன், உணவு பொட்டலங்களை வழங்குவதை முறைப்படுத்தி பரவலாக்கியது.

மருத்துவமனைகளிலும், ஏழை எளிய மக்களுக்கு நேரிலும் உணவு பொட்டலங்களாக வழங்கப்பட்டன.இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி, கோவில்களில் மீண்டும் இலையில் அன்னதானம் பரிமாறப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, அனைத்து கோவில்களிலும் நேற்று வாழை இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது; ஏராளமான பக்தர்கள், சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட்டனர். கொரோனா கட்டுப்பாட்டு காலம் வரை, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும், வழக்கம் போல உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !